“அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன் “

மாறாத வடுக்கள்.

             
உலகத்தின் மீது கோபமெனக்கு ,
அதன் கொள்கைகள் மீது வெறுப்பெனக்கு ,
மனிதர்கள் மீது அனுதாபமெனக்கு ,
நாளை என்பது நிச்சயமில்லாத வாழ்வில்..
சாதி மதமென்பார் , இனம் மொழியென்பார் ,
குலம் கோத்திரம் மென்பார் - குருதி
எல்லோர்கும் ஒரே நிறமென அறியாதவர் ,
வலி உடலுக்கு உடல் மாறுபடாது என்பதை உணராதவர் .

மனித உரிமை என்பார் ,
மானுடத்தை காப்போமென்பார் ,
ஐக்கிய நாடுகள் சபை என்பார் ,
அடுக்கடுக்காய் பார்ட்டிகளில் கலந்துகொள்வார் ,
கை கொடுங்கள் ஐயா என்றால்
கை கட்டி வேடிக்கை பார்ப்பார் ,
உயர்மட்டங்களை தேடிச்சென்றால் ..
உள் நாட்டு விவகாரமென்பார் .

விலங்கொன்று தாக்கப்பட்டால் ..
மிருகவதை சட்டமென்பார் ,
விலங்கின பாதுகாப்பென்பார் ,
தாக்கியவன் சிறையிலடைக்கப்படுவான் .
இன்று பூனை ஒன்று குப்பைத்தொட்டியில்..
இடப்பட்டது தலைப்புச்செய்தி
உலகச்செய்திகள் அனைத்திலுமே ,
ஈழத்தில் மனித உயிர்களெல்லாம் நசிக்கப்பட்டு..
எஞ்சியவரெல்லாம் முட்கம்பிகளுக்குள்
முடக்கப்பட்டும் இன்று வரை
தட்டிக்கேட்பார் யாருமில்லை .

G8 நாடுகள் என்பார் ,
வீற்றோ பவர் நாடுகள் என்பார் ,
வளர்ந்துவிட்ட நாடுகளென்பார் ,
வகை தொகையின்றி ஆயுதம் செய்வார் ,
அதை பரீட்சித்து பார்க்குமிடம் ..
வளர் முக நாடுகளென்பார் ,
வட்டி இல்லாக்கடணுக்காய் -அள்ளி
இறைத்திடுவார் ஆயுதங்களை .
அப்போ அமெரிக்கா அணு பரீட்சித்து
ஹிரோஷிமா , நாகஷாயி - இப்போ
அநேக நாடுகள் தங்கள் தயாரிப்புக்களை
பரீட்சித்துப் பார்த்த இடம்
எங்கள் முள்ளிவாய்க்கால்..
எத்தனை நூறு ஆண்டுகளானாலும்
மாறாத வடுக்களாக அதன் சுவடுகள்..!

1 கருத்து:

Unknown சொன்னது…

கோமளேஷ்வரி பெற்றெடுத்த குலக்கொழுந்தே பிரசன்னா! நீ நினைத்ததெல்லாம் பெற்று நீடூழி வாழ என் வாழ்த்துக்கள்...!!!
உங்கள் அம்மா எங்கு இருந்தாலும் அவரது ஆசிகள் உங்களை நேரிதவராது வழிநடத்தும்!! அம்மா கவிதைகள் இந்த அம்மாவையும் கவர்கின்றன...